தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூடா ஊழல் விவகாரம்; சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.. கர்நாடக உயர் நீதிமன்றம்! - Siddaramaiah MUDA Case - SIDDARAMAIAH MUDA CASE

Karnataka CM Siddaramaiah MUDA Case: மூடா ஊழல் வழக்கு தொடர்பாக ஆளுநரின் அனுமதிக்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கில், ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்தராமையா முடா வழக்கு
சித்தராமையா (credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 4:51 PM IST

Updated : Aug 19, 2024, 10:34 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் நில ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த ஜூலை 26ஆம் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கோரி, சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமாயி கிருஷ்ணா, எஸ்பி பிரதீப்குமார் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து மனு வழங்கினர். தற்போது ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சித்தராமையா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கர்நாடகா தலைமைச் செயலர், ஆளுநரின் சிறப்புச் செயலர், புகார்தாரர்களான டி.ஜே.ஆபிரகாம், சினேகமாயி கிருஷ்ணா, எஸ்பி பிரதீப்குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதில் கூறப்பட்டிருப்பதாவது, “முதல்வர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A, 19 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அம்சங்களை கருத்தில் கொள்ளாமல், ஆளுநர் கண்மூடித்தனமாக அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

புகார் தொடர்பாக முதல்வர் ஏற்கனவே விரிவான பதில் அளித்திருந்தார். ஆனால், அமைச்சரவையின் ஆலோசனையின்றி, அவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதித்து ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். முதல்வர் அளித்த பதிலை கவர்னர் வேண்டுமென்றே புறக்கணித்து வழக்கு தொடர அனுமதித்துள்ளார். இது அரசியலமைப்பிற்கு எதிரான முடிவு.

எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த உத்தரவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், மனுதாரரின் கண்ணியத்துக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பு ஏற்படும். மேலும், முதல்வர் அலுவலகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும். எனவே, கவர்னர் உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்'' என்று இடைக்கால நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகப்பிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 29ஆம் தேதி அடுத்த விசாரணை வரும் வரை விசாரணை நீதிமன்றம் முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரக்‌ஷா பந்தன் பண்டிகை: பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Last Updated : Aug 19, 2024, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details