கோர்பா:சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் பந்தபரா கிராமத்தில் ஒருவரது சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்கு மற்றும் பள்ளி பையில் 17 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த ஒருவரது சடலத்தை கைப்பற்றினர்.
மேலும் சடலத்தின் அருகே கிடைந்த பாஸ்போர்ட்டை கைப்பற்றிய போலீசார் கொல்லப்பட்டது முகமது வாசிம் அன்சாரி என கண்டறிந்தனர். போலீசாரின் விசாரணையில் 28 வயதான முகமது வாசின் அன்சாரி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, முகமது வாசிம் அன்சாரியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்களை வரவழைத்து உடலை அடையாளம் காணச் செய்தனர். மேலும், வாசிம் அன்சாரியின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்கள் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முகமது வாசின் அன்சாரி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்ததாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக முகமது வாசிம் அன்சாரி சவுதி அரேபியாவுக்கு பணிக்காக சென்றதாகவும் அவர் நாடு திரும்புவது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வேலைக்காக சவுதி சென்றது முதல் முகமது வாசிம் அன்சாரியுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் இருப்பினும் அவர் குடும்பத்தினருடன் பேசுவதை குறைத்துக் கொண்டே வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.