புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான (2024- 25) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கெடுத்து பேசி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், " உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடு என்ற சாதனையை படைத்திருப்பதாக கூறுகிறார்கள் (மத்திய அரசு). ஆனால், இந்தியாவில் ஒரு தனிநபருடைய வருமானம் 2.5 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாம் பார்க்கின்ற 80 கோடி மக்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள். அவர்களின் தனிநபர் வருமானம் மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அவர்கள் வாழும் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விலைவாசி உயர்வால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
25 கிலோ அரிசியின் விலை இன்று, 700 ரூபாயில் இருந்து 1700 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்த கோதுமையின் விலை 65 கிலோ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று ஒரு கிலோ பருப்பு 70 ரூபாய் என்ற நிலையில் இருந்து 145 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்படி விலைவாசி உயர்வால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.
ஏழைகளின் ஊதியமாவது உயர்ந்திருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்தபட்ச படிப்பு படித்திருப்பவர்களின் மாதாந்திர ஊதியம் 6000 ரூபாய்க்கு மேல் இல்லை என்று சொல்லலாம். பட்டதாரிகளுக்கான ஊதியம் 12 ஆயிரத்துக்கு கீழாகதான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.