தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிச்சை என்ற 73 வயது முதியவர் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியிடம் பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை அறிக்கையை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை சாட்சியங்களின் அடிப்படையில் இன்று (பிப்.7) தீர்ப்பு வழங்கப்பட்டது. முதியவர் பிச்சை குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை என நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.
![தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23492482_child-qbuse-judgement.jpg)
இதையும் படிங்க: திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தினர் 5 பேர் மீது போக்சோ வழக்கு!
மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் 6 லட்ச ரூபாய் சிறுமியின் எதிர்கால வாழ்விற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.