சண்டிகர்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 104 பேர் நேற்று சண்டிகர் விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஹரியானாவை சேர்ந்தவர்கள் 33 பேர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தலா மூன்று பேர், சண்டிகரை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 104 பேர் நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 19 பேர் பெண்கள், நான்கு வயது ஆண் குழந்தை , இரண்டு சிறுமிகள் கொண்ட 13 பேர் சிறார்களும் அடங்குவர்.இந்தியா திரும்பிய நிலையில் அவர்கள் எவ்வாறான கஷ்டங்களை சந்தித்து அமெரிக்கா சென்றனர் என்றும், கடினமான சூழலில் திருப்பி அனுப்பட்டது குறித்தும் ஊடகங்களிடம் பேசி உள்ளனர்.
முகவரால் ஏமாற்றப்பட்டவர்: நாடு திரும்பியவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங் 36 வயதானவர். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டம் ஹார்தோர்வால் கிராமத்தை சேர்ந்த இவர் பிழைப்புத் தேடி அமெரிக்கா சென்றார். அமெரிக்கா எல்லையில் ரோந்து படையால் கடந்த ஜனவரி 24ஆம் தேதி பிடிக்கப்பட்டார். ஊடகங்களிடம் பேசிய ஜஸ்பால் சிங், "சட்டப்பூரவமான முறையில் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவதாக கூறிய பயண முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டேன். முகவருக்கு ரூ.30 லட்சம் கொடுத்தேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விமானம் மூலம் பிரேசில் அழைத்துச் செல்லப்பட்டேன். ஆறு மாதங்கள் பிரேசிலில் தங்கி இருந்தேன். அடுத்து இன்னொரு விமானத்தில் அமெரி்க்கா அழைத்துச் செல்கின்றோம் என்று முகவர் சொன்னார். ஆனால், என்னை ஏமாற்றி விட்டார். எங்களை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றார்.
அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற போது எல்லை ரோந்து படையால் கைது செய்யப்பட்டேன். 11 நாட்கள் என்னை அவர்கள் சிறைப்படுத்தினர். நான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றேன் என்ற தகவல் என்னிடம் சொல்லப்படவில்லை. என்னை வேறு ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவே நான் நினைத்தேன். விமானத்தில் வந்த ஒரு அமெரிக்க போலீஸ் அதிகாரி, என்னிடம், நாங்கள் இந்தியாவுக்கு செல்வதாக கூறினார். கைவிலங்கிடப்பட்டதுடன், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டேன். அமிர்தசரஸ் வந்த பின்னர் தான் கைவிலங்கு, கால் சங்கிலி ஆகியவை அகற்றப்பட்டன," என்றார்.
இதுகுறித்து பேசிய ஜஸ்பால் சிங் உறவினர் ஜஸ்பீர் சிங், "இன்றைக்கு காலையில் ஊடகங்கள் வாயிலாகத் தான் ஜஸ்பால் சிங் நாடு திரும்புவதை தெரிந்து கொண்டோம். இவையெல்லாம் இரண்டு அரசுகளுக்கு இடையேயான விவகாரம். வேலைக்காக வெளிநாடு செல்கின்றோம். எங்களது குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கருதி பெரும் கனவுடன் வெளிநாடு செல்கின்றோம். ஆனால், இவையெல்லாம் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
படகு கவிழ்ந்து விபத்து: பஞ்சாப் மாநிலம் ஹோசியாப்பூர் பகுதியை சேர்ந்த இருவரும் நாடு திரும்பி உள்ளனர். ஊடகங்களிடம் பேசிய ஹர்வீந்தர் சிங், "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, நிகரஹோவா வழியாக மெக்சிகோ அழைத்துச் செல்லப்பட்டேன். என்னோடு மேலும் சிலரும் அமெரிக்காவுக்குள் அழைத்து செல்லப்பட்டோம். மலைகளைக் கடந்து சென்றோம். படகில் பயணித்தோம். நாங்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. நான் உயிர் பிழைத்தேன். ஒருவர் கடலில் மூழ்கி விட்டார். பனாமா காட்டுப் பகுதியில் வந்த போது இன்னொருவர் உயிரிழந்து விட்டார்.
முதலில் ஐரோப்பா சென்று விட்டு, பின்னர் மெக்சிகோ அழைத்துச் செல்லப்படுவோம் என்று முகவர் என்னிடம் கூறினார். அமெரிக்கா செல்வதற்காக ரூ.42 லட்சம் செலவழித்திருக்கின்றோம். சில நேரம் சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தது. பெரும்பாலும் உணவு கிடைக்கவில்லை. அத்தகைய சூழலில் வெறும் பிஸ்கெட் மட்டும் உண்டு பசியாறினோம்," என்றார்.
மலைப்பகுதியில் ஆபத்தான பயணம்: நாடு திரும்பியுள்ள பஞ்சாப்பை சேர்ந்த இன்னொருவர் பேசும்போது, முகவர்கள் மூலம் அமெரிக்கா சென்றோம். போகும் வழியில் 35,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உடைகள் திருடு போய்விட்டன. முதலில் எங்களை இத்தாலி அழைத்துச் சென்று விட்டு பின்னர் லத்தீன் அமெரிக்கா அழைத்துச்செல்லப்பட்டோம். 15 மணி நேரம் தொடர்ச்சியாக படகில் பயணித்தோம். பின்னர் 45 கி.மீ தூரம் நடந்தே சென்றோம். 17 முதல் 18 மலைகளை கடந்து சென்றோம். மலை பாதையில் செல்லும் போது சறுக்கி விழுந்தால், பிழைப்பது கடினம் என்ற சூழலில் பயணித்தோம். எங்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அவரை வழியிலேயே விட்டுச் செல்ல வேண்டிய நிலையும் நேரிட்டது. போகும் வழியில் இறந்த சிலரது உடல்களையும் பார்த்தோம்,"என்றார்.