சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஹரன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ரவுடி திருவேங்டகம், சீஸிங் ராஜா ஆகியோர் சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் 17 ஆவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது ஆம்ஸ்ட்ராங்கை படுகொலைக்கு பயன்படுத்துவதற்கான வெடிகுண்டுகளை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் (அம்பேத்கர் சிலை அருகே) வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு கொடுத்ததாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் செய்முறைத் தேர்வு துவக்கம்!
இந்த நிலையில் வழக்கறிஞர் ஹரிஹரன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தாம் 112 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரியிருந்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இப்போதைக்கு ஜாமீன் தர முடியாது எனக் கூறி அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரிஹரன் தாக்கல் செய்திருந்த மனுவில்,"விசாரணை நிலுவையில் இருந்த போது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்,"என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.