சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தூரத்தில் இருக்கும் இடத்தை குறைந்த நேரத்தில் அடைவதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் மற்றும் சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. அது தற்போது வரையிலும் நடைமுறையில் உள்ளன. போக்குவரத்து சேவையில் இன்று முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ ரயில் பயணத்தை சென்னை மக்கள் அதிகப்படியாக பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, ரூ.63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம் - சிறுசேரி வரை 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்கள்
இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக சென்னையில் பூந்தமல்லி - மெரினா கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்களுடன் இயக்குவதற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து வடபழனி வரை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆற்காடு சாலை பகுதியில் சுரங்கப்பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இரட்டை அடுக்கு திட்டம்
5-வது வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் மற்றும் 4 வது பூந்தமல்லி - மெரினா கலங்கரை விளக்கம் வழித்தடமும் இணையும் இடத்தில் இந்த சாதனை நடைபெறவுள்ளது. அதாவது வடபழனியிலிருந்து போரூருக்கு இடையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே தூணில் 4 ரயில்கள் வந்து செல்லவும், ரயில்கள் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் நமது ஈடிவி பாரத்திடம் இந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் செல்லக் கூடிய வழித்தடம் 5 ஆனது கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழித்தடம் 4ன் மேல் செல்கிறது. வழித்தடம் 5 கோயம்பேட்டில் இருந்து காளியம்மன் கோயில் வழியாக ஆதம்பாக்கம் வரை சுரங்கப் பாதை வழியாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த வழியில் அதிகமான நிறுத்தங்களை வைக்க முடியாது. மேலும், அவ்வழியில் மக்களின் பயன்பாடு குறைவாகவே இருப்பதால் அதனை மேற்கு நோக்கி பாதைகளை பிரித்து போரூர், முகலிவாக்கம், ராமாபுரம் வழியாக பின்னர் ஆதம்பாக்கம் வழியாக சோளிங்கநல்லூர் செல்வது போன்ற திட்டத்தை வகுத்துள்ளோம்" என தெரிவித்தார்.
நான்கு கிலோ மீட்டருக்கு லூப் லைன்
பின்னர், இந்த திட்டத்தின் வரைபடத்தை வைத்து தெளிவாக விவரித்த அர்ச்சுனன், " மாதவரத்தில் இருந்து மெட்ரோ ரயிலை கொண்டு வர இயலாது. பூந்தமல்லியில் இருந்து தான் கொண்டு வர இயலும். எனவே பூந்தமல்லியில் இருந்து கொண்டு வரப்படும் மெட்ரோ ரயில் ஐந்தாவது வழித்தடத்தில் இருந்து நான்காவது வழித்தடத்திற்கு செல்வதற்கு தனியாக ஒரு லூப் லைன் நான்கு கிலோமீட்டருக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு மிக குறுகிய இடமே இருக்கிறது. 20 முதல் 25 மீட்டர் வரையில் மட்டுமே சாலை அகலம் உள்ளது. எனவே கட்டிட வேலைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.
வலுவான தூண்கள்
ஒரு வழித்தடத்தை அமைப்பதற்கு U ( U grider) வடிவிலான முன்னரே கட்டப்பட்ட கட்டடம் தேவைப்படுகிறது. இது 150 டன் எடை உள்ளது. இது போலவே நான்கு U Grider அமைக்கப்படுகிறது. தற்போது இந்த லூப் லைன் அமைக்கப்படுவதால் 5 வதாக ஒரு U Grider அமைக்க வேண்டும். அகலத்திற்கான கிரைடர் 200 டன்னும் உள்ளது. மேலும் இப்பகுதியில் மேலும் கட்டிட வேலைகள் உள்ளது. அதே பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எனவே எடையானது அதிகமாக இருக்கிறது. இதனை தாங்குவதற்கு மூன்று புள்ளி ஐந்து மீட்டர் விட்டம் நீளத்திற்கு தூண்கள் வலுவாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் வரை லுப் லைன் அமைக்கப்படும். இந்த லூப் லைனின் தூணானது 5வது வழித்தடத்தில் இருந்து நான்காவது வழித்தடத்திற்கு மாறுவதற்கு கீழே இருக்கும் தூணில் இருந்து 150 டன் எடையுள்ள ஐந்தாவது தண்டவாளம் அதாவது லூப் லைன் தாங்குவது போன்ற தூண்கள் மேலிருந்து கீழே இறங்குவது போல பெரிய தூண்களில் இருந்து சிறிய தூண்களாக படிப்படியே குறையும்.
1,200 கோடி செலவு!
இந்த நான்கு கிலோ மீட்டரில் ஒரே தூணில் ஐந்து தண்டவாளங்கள் அமைப்பதற்கு 1,200 கோடி அளவில் செலவாகும். இந்தத் திட்டங்கள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தற்போது 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2028 இல் முழுவதுமாக நிறைவடையும்.
கோயம்புத்தூரிலும், மதுரையிலும் மெட்ரோ அமைப்பதற்கு சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அனைத்து திட்டங்களும் வகுத்து மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். அவர்கள் அதனை அனுமதித்து நிதியையும் ஒதுக்கினால் விரைவில் பணிகளை தொடங்கி விடுவோம்" என தெரிவித்தார்.