திருநெல்வேலி: நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணியாற்றும் 3000 பேரில் 80 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர். தென்மாவட்டத்தில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழகத்துக்கே வழிகாட்டுவது போல அமைந்துள்ளது.
டாடா பவர் சோலார்: உலக நாடுகள் தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை நோக்கி பயணிக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் டாடா பவர் சோலார் மற்றும் விக்ரம் சோலார் நிறுவனங்கள் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் மைய வளாகத்தில் ஆலைகள் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டன.
80% பெண்களுக்கு வேலைவாய்ப்பு: ஒப்பந்தத்தின்படி டாடா பவர் சோலார் நிறுவனம் ரூ4400 கோடி மதிப்பீட்டில் கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைத்துள்ள ஆலையில் உற்பத்தி தொடங்க உள்ளது. இந்த ஆலையில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான சூரிய மின்சக்தி தகடு உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஆலையில் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 80 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர். குறிப்பாக உள்ளூரை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த ஆலையில் சூரிய மின்சார தகடுகள், அதற்கான மின்கலன்கள் (பேட்டரிகள்) உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்ந்த தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சோலார் தகடுகள், மின் கலன்கள் பசுமையான மின்சார உற்பத்திக்கான எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. இதே போல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.3125 கோடி மதிப்பில் 3 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் சோலார் மாடுல் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான அடிக்கல்லையும் முதல்வர் நாட்டினார்.
பெண்களின் தன்னம்பிக்கை: ஈடிவி பாரத் தமிழ்நாடுவுடன் பேசிய டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள், "எங்கள் நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கி உள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. பிற நிறுவனங்களும் இதை பின்பற்றி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் எங்களால் வாழ்க்கையில் சாதிக்க முடியும். இன்றைக்கு யாரையம் சார்ந்திராமல் சுயமாக இருக்க முடிகிறது,"என்று பெருமிதம் தெரிவித்தனர்.