திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.51 கோடி கிடைத்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த மாதம், பண்டிகை காலம் மற்றும் தை மாத விழாக்கள் என்பதாலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். கோயிலில் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி உண்டியல்களில் காணிக்கையும் செலுத்திவிட்டுச் சென்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் வசந்த மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றன. கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் எண்ணப்பட்டன. இந்த உண்டியல் என்னும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை, உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 51 லட்சத்து 386 ஆயிரத்து 242 கிடைத்தது. மேலும் தங்கம் ஆயிரத்து 40 கிராமும், வெள்ளி 20 ஆயிரத்து 800 கிராம், 1,248 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.