தேனி: தேனி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஹோட்டல்கள் பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் மாவட்ட ஆட்சியர் சஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன இறைச்சி, பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் ஹோட்டல்கள், டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இன்று மாவட்ட ஆட்சியர் சஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பேக்கரி கடைக்குள் சென்று அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் இருந்த உணவுப் பொருட்கள் எதிலும் தேதி குறிப்பிடாமல் இருந்ததால் அவை அனைத்தையும் அகற்ற உணவு பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்று அங்கு சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் கெட்டுப் போன இறைச்சி இருப்பதை பார்த்து அதனை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்தார். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் மாவட்ட ஆட்சியர் சஜீவனா பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்
இந்த ஆய்வில் சுமார் 200 கிலோவிற்கு மேல் தேதி குறிப்பிடாமல் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள், 2.5 கிலோ கெட்டுப் போன இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 6 கடைகளுக்கு ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் கெட்டுப் போன உணவுகளை விற்பனை செய்தால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜீவனா எச்சரித்து சென்றார்.
இந்த ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறையினர் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும், கெட்டுப் போன பொருட்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டார்.