கோயம்புத்தூர்: சொத்து வரி உயர்வு, ஆண்டு தோறும் 6 சதவீத வரி உயர்வு, அபராத வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை கண்டித்து கோவை மாநகராட்சி கூட்டத்தை திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று (பிப்ரவரி 07) நடைபெற்றது. துணை மேயர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டார்.
திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு:
இதனையடுத்து, ஆண்டுதோறும் ஆறு சதவீத வரி உயர்வு, 100 சதவீத சொத்து வரி உயர்வு , 1 சதவீத அபராதம் போன்றவற்றையும், டிரோன் மூலம் வரி ஆய்வை கண்டித்து, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மேயர் ரங்கநாயகி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![வெளிநடப்பு செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23493853_1.jpg)
தொடர்ந்து, மாநகராட்சி கூட்டத்தை திமுக கூட்டணி கட்சியினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். பின்னர், மன்ற வாயிலில் அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியுள்ளனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிபிஎம் கவுன்சிலர் ராமமூர்த்தி, “2022 ஆம் ஆண்டு 100 சதவீத சொத்துவரி கொண்டுவரப்பட்ட பொழுது அவை எதிர்க்கப்பட்டது. தற்பொழுது அதை நடைமுறை படுத்துவதுடன் ஆண்டுக்கு 6 சதவீத வரி உயர்வும் அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
மேலும், வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு ஒரு சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது. இவற்றை கைவிட வேண்டும். வரி விதிப்பிற்கு ட்ரோன் பயன்படுத்தப்படுவதன் மூலம் தவறான தகவல்கள் வருகிறது. அந்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமான அபராதம் விதிக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ட்ரோன் சர்வே முறையினை கைவிட வேண்டும்”என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி வளாகத்திற்கு ஊர்வலமாக சென்ற கவுன்சிலர்கள் அங்குள்ள காந்தி சிலை முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாநகராட்சி கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு முன்பாக அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர், ரமேஷ் மாநகராட்சி நிர்வாகத்தின் டிரோன் சர்வேவை கண்டித்து கையில் டிரோனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரோன் மூலம் வரி ஆய்வு:
மாநகராட்சியில் வரி வசூல் இருப்பதற்காக, ட்ரோன் மூலமாக அளவிடும் செய்யும் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒரு சிலரின் வீட்டின் உரிமையாளர்களுக்கு, தவறுதலாக கணக்கீடு செய்து அதிக அளவில் வரி போடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, டிரோன் சர்வேவை தற்காலிகமாக நிறுத்துவதை தவிர்த்து, திட்டத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திமுகவின் மாமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், “ட்ரோன் சர்வே என்ற பெயரில் மக்கள் மீது அதிகளவில் வரி விதித்து வருகின்றனர். வரி உயர்வையும், வரி கட்டாமல் இருந்தால் அதற்கு பெனால்டி என கூடுதல் தொகையும் வசூலித்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் இருக்க கூடிய வீடு என்பதால் அந்த பகுதியில் தொடர்ந்து சாலை சீரமைப்பு மேற்கொள்ளவில்லை.
இதற்காக ரூ. 650 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், அதற்கான எந்த திட்டமும் கோவையில் நடைபெறவில்லை. திமுகவினர் தொடர்ந்து கோவை மக்களை வஞ்சித்து வருகின்றனர். இதனை கண்டிக்கும் விதமாக அதிமுகவினர் மாபெரும் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.