மதுரை: மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு பணியில் ஈடுபடுவது எப்படி என தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தத்ரூபமாக ஒத்திகை மேற்கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது போலவும் அதிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக எப்படி மீட்பது என்றும், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பது போலவும் ஒத்திகை நடைபெற்றது. ஒன்றுடன் ஒன்று மோதிய ரயில் பெட்டிகளை அகற்றுதல், ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்ட பயணிகளை பத்திரமாக மீட்பது, ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகள் போன்ற மீட்பு பணி ஒத்திகைகள் நடைபெற்றன.
![மதுரையில் ரயில் விபத்து மீட்பு பணி ஒத்திகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23495270_thumnail_16x9_mdu1_aspera.jpg)
இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், மருத்துவ குழுவினர், செஞ்சிலுவை சங்கத்தினர், தீயணைப்பு படையினர், மாவட்ட பேரிடர் மீட்புத் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறையினர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, கோட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளும் ரயில் விபத்து குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட நபர் கைது!
மேலும் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு ஆய்வு நிபுணர்கள் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதும் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது. ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளித்து அவர்களை 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வது போலவும், விபத்துக்குள்ளான இடத்தில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக அறை அமைப்பது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் இருந்து தேசிய மீட்பு படையினர் கயிறுகள் மூலமாகவும் ஏணிகளை பயன்படுத்தியும் அவசர வழியில் பயணிகளை மீட்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்தப் பயிற்சி ஒத்திகையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிஜத்தில் விபத்து நடந்து விட்டதோ என கருதி கூடல் நகர் பகுதியில் பாத்திமா கல்லூரி மேம்பாலம் அருகே ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குழுமியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.