மதுரை: அண்ணல் காந்தி எந்த மண்ணில் தனது ஆடம்பரமான ஆடைகளை துறந்து எளிமையான அரையாடைக்கு மாறினாரோ அதே மண்ணில் தான் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் அணிந்திருந்த அவரது ரத்தம் தோய்ந்த ஆடைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது எத்தனை வேதனைக்குரியது. 20 முறை தமிழ்நாட்டிற்கு வந்த தேசப்பிதா காந்தியடிகள் ஐந்து முறை மதுரை வந்திருக்கிறார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்
காந்தியின் வாழ்வில் மதுரை மண் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த அந்த மாமனிதன் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது காந்தி நினைவு அருங்காட்சியகம். கடந்த 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் காந்தி நினைவு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் பெண் அரசியான ராணி மங்கம்மாளின் கோடைகால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகழ்ந்த கட்டடம்தான் பின்னாளில் காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றம் கண்டது.
புனரமைப்பு பணிகள்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.6 கோடி மதிப்பீட்டில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புனரமைப்பு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு வளாகத்தில் உள்ளே அமைந்துள்ள திறந்தவெளி கலையரங்கம், கழிவறை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக மேலும் ரூபாய் 4 கோடி ஒதுக்கப்பட்டது. பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள வினோபா குடிலில் தற்காலிகமாக புகைப்படங்களைக் கொண்டு மிகச் சிறிய அளவில் கண்காட்சி அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் சுற்றுலா வாசிகள் இந்த இடத்தை மட்டுமே பார்வையிட முடியும் என்ற நிலையில் அவர்களால் காந்தி பயன்படுத்திய பொருட்கள், சுடப்பட்ட போது அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை பார்க்க இயலாத நிலை உருவானது. இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரையில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
இது குறித்து மதுரையைச் சேர்ந்த மீனா ராணி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், ''நான் இந்த வளாகத்தில் தான் காந்திய சிந்தனைகள் மற்றும் யோகா உள்ளிட்ட அனைத்தையும் படித்தேன். தற்போது எம்எஸ்.சி. யோகா தெரபி சென்னையில் முடித்துள்ளேன். ஆகையால் காந்தி அருங்காட்சியகத்தோடு எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகள் மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்த சமயத்தில் அணிந்திருந்த ஆடையை பார்க்கவே பெரு விருப்பம் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது உள்ளே நடைபெறுகின்ற சீரமைப்பு பணிகளால் அவற்றை சுற்றுலா பயணிகளால் பார்க்க இயலவில்லை. தற்போது அதன் மாதிரியே அல்லது புகைப்படங்களை மட்டுமே காட்சிப்படுத்தி வைத்திருப்பதால் அது அவர்களுக்கு ஈர்ப்பை தரவில்லை. ஆகையால் ஏமாற்றத்துடன் திரும்ப செல்வதை நானும் பலமுறை பார்த்து உள்ளேன். ஆகையால் தமிழ்நாடு அரசு மிக விரைவாக இந்தப் பணிகளை நிறைவு செய்தால் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.
காந்தியின் வேட்டி
காந்தியின் நினைவாக நாட்டில் அமைக்கப்பட்ட ஏழு அருங்காட்சியகங்களில் முதலாவது அருங்காட்சியகம் தான் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம். அதே போன்று தென்னிந்தியாவிலேயே காந்தியடிகளின் நினைவாக உள்ள ஒரே அருங்காட்சியகமும் இது தான். இந்த அருங்காட்சியகத்தில் முதல் பிரிவில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறும், இரண்டாவது பிரிவில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், மூன்றாவது பிரிவில் அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவில் தான் காந்தியடிகள் நேரடியாக பயன்படுத்திய 14 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் அவர் சுடப்பட்டு இறந்த அந்த இறுதி நாளின் போது அணிந்திருந்த வேட்டி ரத்தக்கறையுடன் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது கைப்பட எழுதிய கடிதங்கள் இங்கே உள்ளன. நான்காவது பிரிவில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த புகைப்படங்கள் எல்லாம் இடம் பெற்று உள்ளன. ஆனால் இவைகளில் பெரும்பாலானவை தற்போது உள்ளுக்குள்ளேயே ஓர் அறையில் வைத்து பூட்டி வைத்திருப்பதால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே.
ஆண்டொன்றுக்கு சராசரியாக 6 லட்சம் பேர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர்.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், '' மகாத்மா காந்தியடிகள் தான் வாழும் காலத்தில் இந்திய நாட்டின் விடுதலைக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இங்கு உள்ள புகைப்படங்கள் மட்டுமன்றி அவர் பயன்படுத்திய பொருட்களும் சுடப்பட்டு இறந்த போது அணிந்திருந்த ஆடைகளும் நமக்கு மிக எளிதாக உணர்த்தும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சீரமைப்பு பணிகள் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. ஆகையால் உடனடியாக தமிழ்நாடு அரசு இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து இந்த பணிகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
பணிகள் எப்போது முடியும்?
இந்த பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித் துறையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் பொதுப்பணித்துறையால் அனுமதிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விடும். அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே தற்போது பூச்சுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்குப் பிறகு நாங்கள் முறைப்படி காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவோம்'' என்றனர்.
நூலகம்
மகாத்மா காந்தியடிகளின் சேவா கிராமத்தில் உள்ள அவரது சிறிய குடில் ஒன்று மாதிரியாக இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அஸ்தியைக் கொண்ட பீடம் ஒன்றும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்ட நேரமான மாலை 05:17 மணிக்கு சர்வசமய பிரார்த்தனை கூட்டமும் நடைபெறுகிறது. அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், காந்தியம் சார்ந்து ஆய்வு செய்ய வருகின்ற அனைத்து மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் காலப்பெட்டகமாகத் திகழ்கிறது. மகாத்மா காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஒன்றான காந்திய கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கில் இங்கு நூலகம் உருவாக்கப்பட்டது.
வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர், அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோர் வருகை தந்து இந்த நூலகத்தை சிறப்பித்துள்ளனர். நூலகவியல் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் இதனை சிறப்பு நூலகமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளார். காந்தியம் தொடர்பான நூல்களோடு சற்றேறக்குறைய 30 ஆயிரம் நூல்கள் இங்கே உள்ளன. மகாத்மா காந்தி நடத்திய யங் இந்தியா, ஹரிஜன் நூல்களின் மூலப்பிரதிகள் உள்ளன. மகாத்மா காந்தி அடிகள் எழுதிய 28,700 கடிதங்களின் நகல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இது குறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் கூறுகையில், '' தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பொருட்களின் தரத்தில் பொதுப்பணித்துறை மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. இருந்த போதும் தற்போது பணிகள் விரைவு படுத்தப்படும் என நம்புகிறோம். மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் பொதுப்பணித்துறை வேலையை நிறைவு செய்து விட்டால் நாங்கள் உடனடியாக காட்சிப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு அடுத்த சில வாரங்களுக்குள் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை மக்களின் பார்வைக்கு திறந்து விடுவோம்'' என்றார்.