தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு பிரகாஷ் நடத்துநராக பணியாற்றி வந்த பேருந்தில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது மகாலட்சுமி தனக்கும், ஆண்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர குமார் ஆகியோருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுடனும், நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், எங்களிடம் ரூ.6 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரகாஷ் தனது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கு அரசு வேலைக்காக, கடந்த 2020 ஆம் ஆண்டு தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மகாலட்சுமி மற்றும் நாகேந்திரகுமாரிடம் 6 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
மேலும், மகாலட்சுமி கும்பல் பல்வேறு தேதிகளில் பிரகாஷை போன்ற ஏழு நபர்களிடம், சுமார் 48 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, போலி அரசு பணி ஆணையினை வழங்கியுள்ளனர். இதே போல் அல்லிநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் 7 நபர்களிடம் பல்வேறு தேதிகளில் நாகேந்திர குமார் 41,50,000 ரூபாய் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணையை கொடுத்துள்ளார். இந்நிலையில், பணி ஆணை போலி என்பதை அறிந்த பிரகாஷ், தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 14 கோடி ரூபாய் போனஸாக கொடுத்து ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய கோவை ஐ.டி. நிறுவனம்!
இதற்கிடையே பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஏழு பேரிடம் சுமார் ரூ. 48 லட்சத்தை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே போல பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார், கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சுமார் ஒரு கோடி 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பணத்தை இழந்த பிரகாஷ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்த மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
அவரை தொடர்ந்து நாகேந்திர குமார், மகாலட்சுமி இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கண்ணன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவரை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.