சென்னை: நெட்ஃபிளிக்ஸில் வெளியான ’Never Have I Ever’ எனும் வெப் சீரியஸ் மூலம் பிரபலமானவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். இந்த வெப் சீரியஸ் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரியஸ் மற்றும் மைத்ரேயிக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டிலும் அதிகமாக இருக்கிறார்கள்.
அமெரிக்க இந்திய தமிழ்ப் பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். அங்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்கிறார் என்பதே ’Never Have I Ever’ வெப் சீரியஸின் கதை.
கனடாவில் வளர்ந்த தமிழ் பெண் மைத்ரேயி ஈழத்தை பூர்விகமாக கொண்டவர். அப்பா, அம்மா காலத்திலேயே கனடாவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும் தமிழ் கலாச்சாரங்கள் மீது அதிக அன்பை வெளிப்படுத்தி வருபவர் மைத்ரேயி. சமீபத்தில் அவர் இந்தியா வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட போட்டோ, வீடியோக்கள் மூலம் இதனை அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவிற்கு வருவது என்பது அவரது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்துள்ள மைத்ரேயி நடிகை ஜோதிகாவை சந்துள்ளார்.
ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் தனக்கு பிடித்த நடிகையான ஜோதிகாவை சந்த்தித்தேன் என்றும் தன்னுடைய குழந்தை பருவத்தை ஜோதிகாவின் படங்கள்தான் கட்டமைத்தன என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து அனைவரையும் நண்பர்களாக்கியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சம்பளம் வாங்காமல் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்... ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா
தற்போது 'Slanted', 'Freakier Friday' ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் மைத்ரேயி, முன்னதாக ஒரு பேட்டியில் தான் தமிழ் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், 'போக்கிரி', 'சந்திரமுகி' ஆகிய படங்கள் தனக்கு மிகவும் பிடித்தவை எனவும் கூறியிருந்தார். அத்துடன், ஜோதிகாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தனக்கு நடிப்பின் மீது ஆசை வர விஜய்யும் ஜோதிகாவும் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகாவின் நடிப்பில் ’டப்பா கார்டெல்’ (Dabba Cartel) எனும் ஹிந்தி வெப் சீரியஸ் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.