மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிவேதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2022ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மாற்றுத்திறனாளியான நான், நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றேன். இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால், மாற்றுத்திறனாளிகள் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
எனவே, எம்.பி.பி.எஸ் மாற்றுத்திறனாளிகள் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியானவர் என சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன் இந்த வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், “மனுதாரர் 80 சதவீத மாற்றுத்திறனாளி என மத்திய, மாநில அரசிடம் சான்றிதழ் பெற்றுள்ளார்.
தூத்துக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 40 முதல் 80 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என மருத்துவ விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால், மனுதாரருக்கு 70 சதவீத மாற்றுத்திறனாளி என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 73 வயது முதியவர் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 25 ஆண்டுகள் சிறை தண்டனை…
ஆனால், தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்கள் காரணமாக நீட் கவுன்சிலிங்கில் மனுதாரர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, மனுதாரரை பரிசோதித்து சான்றிதழ் வழங்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவின் முன்பாக மனுதாரர் ஆஜராக வேண்டும். மனுதாரரின் மாற்றுத்திறன், அவரது மருத்துவ படிப்புக்கு இடையூறாக இருக்குமா? என பரிசோதனை முடிவில் தெரிவிக்க வேண்டும். இதில் மனுதாரர் தகுதியற்றவர் என்ற முடிவுக்கு அந்தக் குழு வந்தால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.