சென்னை: சென்னையில் பால் புதுமையினர் என அழைக்கப்படும் LGBTQIA+ சமூகத்தினர் நடத்தும் ’சென்னை வானவில் திரைப்பட திருவிழா’ (Chennai Rainbow Film Festival) இன்று (பிப்.07) மாலை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நேற்று (இப்.07) நடைபெற்றது.
பால் புதுமையினரின் (LGBTQIA+) வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைச் சித்தரிக்கும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளப்படங்கள் ஆகியவற்றை திரையிடுவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது இந்த திரைப்பட விழா. இதுவரை நடந்த 3 பதிப்பு திரைப்பட விழாக்களில் சுமார் 300 படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
தற்போது இதன் நான்காவது பதிப்பு திரைப்பட விழா இன்று(பிப்.07) தொடங்கி பிப்ரவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னையின் அலையன்ஸ் பிரன்சிஸில் (Alliance Française of Madras) நடைபெற உள்ளது. திரைப்பட விழாவிற்கான செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஷகிலா மற்றும் விழா ஏற்பாட்டாளர் ஷாஷா ஆகியோர் பேசினர்.
செய்தியாளர்களிடம் ஷகிலா பேசுகையில், ”சென்னை வானவில் திரைப்பட திருவிழா ஏற்கனவே 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இப்போது நடைபெறவிருக்கும் 4வது பதிப்பு திரைப்பட விழாவை ஷாஷாவினுடைய தலைமையில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் எல்லா நாடுகளிலிருந்தும் 2000 திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு வந்துள்ளன. அதிலிருந்து 55 படங்களை தேர்வு செய்து மூன்று நாட்களாக திரையிடல் நடத்துகிறோம்.
திரையிடப்படும் படங்களுக்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்க உள்ளோம். இது மிகப்பெரிய விஷயம். அனைத்துவகையான மக்கள் போலவே LGBTQIA+ சமூகத்தினரும் அங்கீரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்களுக்கென்று தனித்த அங்கீகாரம் கிடைத்ததில்லை. இன்னும் அதிகமாக இவர்களைப் பற்றி வெலியே தெரிய வரும்போதுதான் அவர்களைப் பற்றிய விழிப்புணர்வும் எல்லோருக்கும் கிடைக்கும்” என பேசினார்.
செய்தியாளர்களிடம் சென்னை வானவில் திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளரான சாஷா பேசுகையில், ”இதுவரை மூன்று பதிப்பு திரைப்பட விழாவை நல்லபடியாக நடத்தியுள்ளோம். ஆனால் இந்த பதிப்பில் பால் புதுமையினரான மக்களின் கதைகள், உணர்வுகள், பிரச்சனைகளைப் பற்றிய படங்களை மட்டும் திரையிடாமல் இரண்டு குழு விவாதங்களை நடத்துகிறோம்.
இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவு நீக்கம், சமகால திரைப்படங்களில் LGBTQIA+ சமூகத்தினரின் விவரிப்பு ஆகிய இரு முக்கிய தலைப்புகளில் பேசுகிறோம். இது மட்டுமில்லாமல் எங்களின் பிரச்சனைகளை எளிதில் மக்களுக்கு எடுத்து சொல்கின்ற வகையில் மேடை நாடகம் நடத்தவுள்ளோம்.
இதையும் படிங்க: நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்... மோசடி வழக்கில் பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
மேலும் LGBTQIA+ சமூகத்தினருக்காக ஆதரவாக செயலாற்றிய பொதுச்சமூகத்தினருக்கு ரெயின்போ அம்பாசிடர் (Rainbow Ambassador) எனும் விருதை வழங்குகிறோம். அந்த வகையில் முதன்முறையாக தமிழ் படமான காதலிக்க நேரமில்லை படத்தில் எங்களது LGBTQIA+ சமூகத்தினரை காட்டியதற்காக கிருத்திகா உதயநிதிக்கு விருது கொடுக்கிறோம்.
மேலும் நடிகை ஷகிலா, கார்நாடக இசைப் பாடகரான டி.எம்.கிருஷணா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது மட்டுமில்லாமல் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நடிகர் சந்தோஷ் பிரதாப் என பல்வேறு திரை பிரபலங்களும் வருகை தந்து இந்த திரைப்பட விழாவை சிறப்பிக்க உள்ளனர். இந்த விழாவை திருநங்கைகள் மட்டும் நடத்தவில்லை, LGBTQIA+ எனும் பால் புதுமையினர் அனைவரும் சேர்ந்துதான் நடத்துகிறோம்” என பேசினார்.