சென்னை: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வைர விழா இன்று காலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின், அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகளை வழங்கினார். மேலும் அரசு பள்ளியின் 60ஆம் ஆண்டு மலரை வெளியிட்டு முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “மத்திய அரசு தமிழ்நாட்டில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கிறது. ஆனால், வழங்க வேண்டிய நிதியை மட்டும் வழங்க மறுக்கிறது. நடைமுறையில் இருக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கூட முறையான நிதியை வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 'மாணவர்கள் மனசு' என்னும் பெட்டி வைத்துள்ளோம். ஆனால், மாணவர்கள் அதிலும் தங்களுக்கு ஏற்படும் பய உணர்வுகள், அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்வதில்லை. அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அப்படி இருந்தும் அரசு பள்ளியில் மாணவி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மைகளை விசாரணை செய்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அதையும் தாண்டி அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
இனி அது போன்று நடக்காத வண்ணம் மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க தொடர்ந்து அவர்களுக்கான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. சித்தாலப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் பள்ளியில் உள்ள தண்ணீரை குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை நீங்கள் கூறி தெரிந்து கொண்டேன் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடக்க பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம். 8,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் அதிநவீன ஆய்வுக்கூடங்கள் கொண்டு வந்துள்ளோம். 10 லட்சம் மாணவர்களுக்கு டேப் கொடுப்பதை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் 40 லட்சம் மாணவர்களுக்கு டெக்னாலஜிகளை கொண்டு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.