டெல்லி:18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், சபாநாயகராக இரண்டாவது முறை ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன்.27) நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
18வது மக்களவையில் பதவியேற்றுக் கொண்ட எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரும் 20 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு வரவு வைத்ததாக கூறினார். காரீப் பருவ கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். நவீன காலத்திற்கு ஏற்ப விவசாய அமைப்பு மாற்றப்பட்டு தற்போதைய தேவைகளை அறிந்து அதற்கு எற்ற வகையில் பயிரிடுவதற்கான வசதிகளை அரசு பெருக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
உலகளவில் இயற்கை விவசாய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்திய விவசாயிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகமே கொண்டாடியதாகவும் அதேபோல் அண்மையில் சர்வதேச யோகா தினத்தை உலகமே இணைந்து கொண்டாடியதை அனைவரும் பார்க்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.