டெல்லி:நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பாதுகாப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தளவாட ஏற்றுமதி என்பது 18 மடங்கு அதிகரித்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.
ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அனைத்து அரசு திட்டங்களின் பலன்களை கொண்டு சேர்ப்பை எண்ணமாக கொண்டு அரசு இயங்கி வருவதாகவும் அதன் மூலமே வளர்ந்த இந்தியாவை கட்டமைக்கப்படும் என்பதை நம்புவதாகவும் அவர் கூறினார். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதின் மூலம் மட்டுமே வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று திரெளபதி முர்மு கூறினார்.
அரசின் நலத் திட்டங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டின் கீழ் இருந்து வெளியேறி உள்ளதாக குடியரசுத் தலைவர் கூறினார். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு மலிவு விலையில் மற்றும் உள்நாட்டு உதவி சாதனங்களை அரசு வழங்கி வருவதாகவும் அரசு தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒருங்கிணைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா மற்றும் தபால் நிலையங்களின் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டின் கவரேஜை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையின் கண்ணியம் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு முதல் முறையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த முயற்சிகள், இன்று நாடு மகாத்மா காந்தியின் கட்டளைகளை உண்மையான அர்த்தத்தில் பின்பற்றி வருவதற்கான சான்று என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச சிகிச்சை அரசு வழங்கி வருவதாக கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்களால் இன்று நாடு பல்வேறு பலன்களை அனுபவித்து வருவதாகவும், இந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது, எதிர்க்கட்சியினர் எதிர்த்த போதிலும், இன்று காலத்தின் சாதனையாக நிற்கின்றன என்றார். மேலும் ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் உதவியதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடி ரூபாய் தாண்டியதாகவும் அதனால் மாநிலங்களின் லாபம் அதிகரித்து உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
இதையும் படிங்க:எமர்ஜென்சி இந்திய அரசியலமைப்பின் கருப்பு பக்கம்... வினாத் தாள் கசிவுக்கு கடுமையான சட்டம்- குடியரசுத் தலைவர்! - President Droupdadi murmu