டெல்லி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கடித்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, ராஷ்டிரபதி பவனின் அறிக்கையின் படி, நடந்து முடிந்து 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 543 மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து நிலையில், ஆட்சி அமைக்க 272 மக்களவை உறுப்பினர்கள் தேவை. அதில் பாஜக 240 இடங்களில் தனித்து வென்றுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதற்கான தேவையான இடங்கள் உள்ளதால், இந்திய அரசியலமைப்பு 75 (1) பிரிவின் கீழ் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் மற்ற உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.