புதுடெல்லி/மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த சூழலில், கூட்டணியில் பாஜக, சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகளுக்கிடையே அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. கட்சியின் பிரதிநிதிகள் அளவில் இதுகுறித்து சர்ச்சைகள் இருந்து வந்தாலும், முதல்வரை டிக் செய்யும் விவகாரத்தில் பாஜக தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஏக்நாத் ஷிண்டே கூறிவிட்டார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
அதுகுறித்து விவரித்த ஏக்நாத் ஷிண்டே,'' இந்த சந்திப்பு நன்றாகவும், நேர்மறையாகவும் இருந்தது. நாங்கள் அனைவரும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்தோம். மும்பையில் மகாயுதியின் மற்றொரு சந்திப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது என முடிவாகி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். கூட்டணி கட்சிகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக இருக்கிறோம், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் விரைவில் அரசாங்கத்தை அமைப்போம்," என்று அவர் கூறினார்.