வதோதரா:குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சி-295 எனப்படும் ராணுவ பயன்பாடு மற்றும் விஐபி-களின் பாதுகாப்புக்கான விமானங்களை ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் உள்நாட்டில் தயாரிக்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 56 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பெறப்படவுள்ளது. மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆலையில் தயாரிக்கப்படவுள்ளது. ஏர்பஸ் உடனான இந்த ஒப்பந்தம் 2012-ல் அப்போதைய டாடா சன்ஸ் தலைவரான, மறைந்த ரத்தன் டாடா இருந்தபோது போடப்பட்டது.
இந்நிலையில், சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான புதிய வளாகத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
தொலைநோக்கு பார்வையின் மற்றொரு வெற்றி:அப்போது பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ''இன்று நாங்கள் ஒரு அதிநவீன தொழில்துறை வசதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதோடு, இரு பிரபல நிறுவனங்களுக்கிடையில், ஒரு அசாதாரண திட்டம் எவ்வாறு யதார்த்தமாகிறது என்பதையும் இன்று நாம் காண்கிறோம். பிரதமர் மோடி, இது உங்கள் தொலைநோக்கு பார்வையின் மற்றொரு வெற்றி ஆகும். உங்கள் பார்வை இந்தியாவை ஒரு தொழில்துறை சக்தியாகவும் முதலீடு மற்றும் வணிகத்திற்கான காந்தமாகவும் மாற்ற வேண்டும். ஏர்பஸ் மற்றும் டாடா இடையேயான இந்த கூட்டுறவு இந்திய விண்வெளித் துறையின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மற்றும் பிற ஐரோப்பிய நிறுவனங்களின் வருகைக்கு புதிய கதவுகளைத் திறக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பெட்ரோ சான்செஸ், 2026 ஆம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் சி -295 வதோதராவில் உள்ள இந்த ஆலை மூலம் தயாரிக்கப்படும். இது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை நவீனமயமாக்குவதில் பங்களிப்பதோடு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உந்துதலாக இருக்கும். இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக திகழும் குஜராத் மாநிலத்தில், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். மேலும், புதிய தலைமுறையினரில் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார்.
புதிய பாதையில் புதிய இலக்கு:பிரதமர் மோடி பேசுகையில், இது என்னுடைய நண்பர் பெட்ரோ சான்செஸின் முதல் இந்திய வருகை ஆகும். இன்று முதல் இந்தியா மற்றும் ஸ்பெயினின் கூட்டாண்மை புதிய திசையை நோக்கி நகரும். இந்த தொழிற்சாலை இந்தியா - ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்தும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், மாற்றத்தையும் அனைவரும் கண்டுள்ளனர்.