டெல்லி:நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குப் பிறகு 18வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று (ஜூன் 24) தொடங்கியுள்ளது. மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றும், நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்த்ருஹரிக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'புதிய நாடாளுமன்றத்தில் இன்றைய கூட்டம் நடப்பது ஜனநாயகத்தின் ஒரு புதிய தொடக்கம் எனவும், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதற்கு மக்களுக்கு எங்கள் மீதிருந்த நம்பிக்கையே மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசின் மீதுள்ள நம்பிக்கையை மூன்றாவது முறையாக மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எங்களின் இப்பயணத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லவே விரும்புவதாகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், எமது ஆட்சி கடமை, செயல்பாடு, கருணையுடன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:18வது மக்களவையின் முதல் கூட்டம்.. இடைக்கால சபாநாயகர், எம்.பிக்கள் பதவியேற்பு! - Parliament Session 2024