திருநெல்வேலி: நடுக்கல்லூர் பகுதியில் டன் கணக்கில் உயிரியல் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து, பழவூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பொது இடத்தில் வீரியமிக்க மருந்துவக் கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்ட (BNS 271,272) பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட ஏழு இடங்களில் 8 பேர் கொண்ட கேரள அலுவலர்கள் குழுஆய்வு செய்தது. தொடர்ந்து, மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என அவர்கள் ஆட்சியரிடத்தில் தெரிவித்தனர்.
அதற்கு, குப்பையால் எந்த பிரச்சினையும் இல்லையென்றால், இடைத்தரகர்கள் அமர்த்தி பணம் செலவு செய்து இங்கு வந்து கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு:
கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடர்பாக, சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர் (51), மாயாண்டி (42) ஆகிய இருவரை போலீசார் டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கேரள அலுவலர்கள் திருநெல்வேலியில் ஆய்வு:
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், நேற்று (டிசம்பர் 20) வெள்ளிக்கிழமை கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் பின்சி அகமது, சுகாதாரத்துறை அலுவலர் கோபுகுமார் ஆகியோர் தலைமையில், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றும் அமைப்பினர் உட்பட 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, நெல்லை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட கோடகநல்லூர், கொண்டாநகரம் இலந்தைக்குளம், சிவஞானபுரம் உள்பட 7 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்து, மருத்துவ கழிவுகளின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம்: கழிவுகளை கேரள அரசே அகற்ற அதிரடி உத்தரவு!
இது குறித்து ஆய்வு செய்த கேரள அலுவலர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை. மருத்துவ சோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரி பொருட்களே அதிகம் உள்ளது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து கேரள அரசிடம் முழுமையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்," என தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அதிரடி கேள்வி?
ஆய்வுக்கு பிறகு கேரளா குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயனிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதில், ஆட்சியர் கார்த்திகேயன் கேரளா குழுவிடம் கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், "சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்கள், முறையாக கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் கழிவுகளை வழங்காதது ஏன்? கழிவு மேலாண்மையிடம் கழிவுகளை வழங்கியிருந்தால் எப்படி குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டது? குப்பைகளை கொட்டியது யார்?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "குப்பையால் எந்த பிரச்சினையும் இல்லையென்றால், இடைத்தரகர்கள் அமர்த்தி பணம் செலவு செய்து இங்கு வந்து கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பேராபத்து. எனவே, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்," என்றார்.
இடைத்தரகர்கள்:
மாவட்ட ஆட்சியர் கேரள குழுவினருடன் விவாதித்தது தொடர்பான விபரங்கள், அதிகாரப்பூர்வமாக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் இடைத்தரர்கள் என அதிகாரப்பூர்வமாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்காத நிலையில், ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இடைத்தரகர் அமர்த்தி, பணம் செலவு செய்து கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால், கைதான இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தடய அறிவியல் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கழிவுகளை ஆய்வு செய்து, அங்கு கொட்டப்பட்டுள்ளது புற்றுநோய் மையம் கழிவுகள் என்பதை உறுதி செய்ய, குறிப்பிட்ட ஆவணங்களை சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்துள்லது குறிப்பிடத்தக்கது.