கோயம்புத்தூர்: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபர் யோகிபாபு. வாராவாரம் வெளியாகும் தமிழ்ப்படங்கள் எல்லாவற்றிலும் யோகிபாபு நடித்திருப்பார். அந்தளவிற்கு எண்ணற்ற படங்களில் நடித்துக் கொண்டிடுந்தாலும் கிடைக்கும் நேரங்களில் பல்வேறு கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் யோகிபாபு. கடவுள் பக்தி அதிகம் கொண்டவராக அறியப்படுகிறார் யோகிபாபு.
இந்நிலையில் யோகிபாபு ஜி.டி.நாயுடு படத்தின் படப்பிடிப்பிற்காக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில், அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று நேற்று (பிப்.21) சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கோவிலில் நடைபெற்ற மிகவும் விசேஷமான அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டார் யோகிபாபு. அவருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதங்களையும் வழங்கினர்.
மேலும் தான் நடிக்கவிருக்கும் இரண்டு புதிய படங்களின் கதைகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். அவரைக்கண்ட அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். யோகிபாபு கோவைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் மருதமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள மிகவும் பிரபலமான கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார் யோகிபாபு.
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்கள், கதையின் நாயகன் என பல்வேறு வேடங்களிலும் நடித்து வருபவர். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'மண்டேலா' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.
இதையும் படிங்க: சொத்துகள் முடக்கப்பட்டது அமலாக்கத்துறையின் அதிகார துஷ்பிரயோகம்... இயக்குநர் ஷங்கர் அறிக்கை
இந்தியாவின் எடிசன் என்றழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு ’ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் ஜி.டி.நாயுடுவாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இதற்கு முன்பு இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானியான நம்பி நாரயணனாக ’ராக்கெட்ரி’ படத்தில் நடித்த மாதவன் அதனை இயக்கவும் செய்திருந்தார்.
ஜி.டி.என் படத்தை விளம்பரபட இயக்குநர் மற்றும் நடிகரான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது.