திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் இடையன்குடி பகுதிக்கு அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். ஆனைகுடி கல்லறைத் தோட்டம் எதிர்புறமுள்ள தோட்டத்தில் தேவதாசுக்கு சொந்தமான கோழிப்பண்ணை மற்றும் பன்றிப் பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா என்பவர் பணிபுரிந்து வந்தார். தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் தோட்டத்தின் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் தோட்டத்தில் கோழி முட்டைகள் அடைகாப்பதற்கான இன்குபேட்டர் எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில், கடந்த 14ஆம் தேதி இரவு இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளின் பேட்டரிகள் சார்ஜ் ஏற்றுவதற்காக கழற்றி வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேட்டரி பாதி சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில், மீதி சார்ஜ் காலையில் ஏற்றிக் கொள்ளலாம் என இணைப்பு துண்டிக்கப்பட்டு சார்ஜ் ஏற்றப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் மறுநாள் காலையில் அங்கு பணிபுரியும் ஜான்சி பாப்பா இன்குபேட்டர் அமைந்துள்ள அறைக்கு சென்ற போது சார்ஜ் போடாமல் இருந்துள்ள பேட்டரி திடீரென வெடித்துள்ளது. இதில் ஜான்சி பாப்பா படுகாயம் அடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: இருக்கைகளில் அமர 10 ரூபாய்; நெல்லை ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் 'நூதன' வசூல்!
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சி பாப்பா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திசையன்விளை காவல்துறையினர் ஜான்சி பாப்பாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி நடுவழியில் வெடித்து பல்வேறு விபத்துகள் நடைபெறும் சூழலில், நெல்லையில் சார்ஜ் போட்டு வைக்கப்பட்டிருந்த பேட்டரி வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.