தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் கோயிலைத் தவிர மற்ற 5 ஸ்தலங்களும் மலை மேல் உள்ளன. இந்த ஒரு ஸ்தலம் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளதால் இக்கோயில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.
முருகனை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
எனவே கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தொழிலதிபர் ஷிவ் நாடார் 200 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அப்பணத்தில் அந்தப் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
1988 ஆம் ஆண்டு மூடப்பட்ட வாசல்
இந்நிலையில், முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் உள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அனைத்து கோயில்களிலும் ராஜகோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில் தான் அமைத்திருக்கும். ஆனால் திருச்செந்தூரில் கிழக்கு பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிரமாண்டமான மேற்கு வாசல் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இந்த கோபுர வாசல் உயரமாக இருப்பதால் தான் இந்த மேற்கு வாசல் எப்போதும் அடைக்கப்பட்டே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அந்த நேரத்திலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது. 1988 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த வழியாகத் தான் சென்று பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வந்துள்ளனர்.
கதவுகளின் சிறப்பம்சங்கள்
இதற்கிடையே கோயிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் கோயிலின் மேற்கு பிரமாண்ட மேற்கு வாசல் திறக்கப்படவுள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த மேற்கு வாசல் கதவுகள் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இந்த மேற்கு வாசல் கதவுகள் மரத்தால் ஆனவை. இந்த கதவுகளில் யாரும் ஏற முடியாத வண்ணம் கூர்மையான இரும்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு இடைப்பட்ட பகுதிகளில் அம்மன், முருகன், பைரவர், கையில் அரிவாளுடன் சுடலைமாட சுவாமி, பத்ரகாளி, வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் என நூற்றுக்கணக்கான கலைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வாயில் புதுப்பிப்பு
இந்த நிலையில் தான் மேற்கு வாசல் உள்ள பகுதியில் உள்ள மண்டப வாயில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தொல்லியல் துறையின் ஆலோசனையின் படி சுண்ணாம்பை ஊற வைத்து அரைத்து அதன் மூலம் மிகவும் கலைநயமான முறையில் ஏற்கனவே இருந்த சிற்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் முனிவர்கள் அமர்ந்த நிலையிலும், பூத கணங்கள் தாங்குவது போன்றும் அமர்ந்திருப்பது போன்றும், ஆடுவது போன்றும் என பல சிற்பங்கள் அமைந்துள்ளன. அதற்கு மேல் உள்ள தளத்தில் யாழிகள், யானைகள் அம்மனை வழிபடுவது போலவும், விநாயகர் உள்பட பல்வேறு சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுநாள் வரை திறக்கப்படாத மேற்கு வாசல் பகுதியில் தற்போது பணிகள் நடந்து வருவதால் இந்த பணிகள் முடிந்த பிறகு, பக்தர்கள் இந்த மேற்கு வாசல் மூலம் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.