கோவை: கோவையில இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் வாகனம் மீது, வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தின் போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளன.
கோவை குனியமுத்தூர்-பாலக்காடு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையாகும். இந்த சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த நிலையில் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பெண் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க நீண்டநேரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தன. வாகன போக்குவரத்து குறைந்திருந்த நேரத்தில் சாலையின் நடுவில் உள்ள டிவைடர் வழியே விரைவாக சாலையை அந்த பெண் இருசக்கரம் வாகனம் மூலம் கடக்க முயன்றார். அவர் வளைந்து திரும்புவதை கவனிக்காமல் அந்த வழியே வந்த இன்னொரு இரு சக்கர வாகனம் அவர் மீது பலத்த வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சருக்கு உடைந்த இருக்கை! மன்னிப்புக் கோரியது ஏர் இந்தியா!
அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடோடி வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பேசிய அப்பகுதி மக்கள், "உக்கடத்தில் இருந்து மதுக்கரை வரை சாலையில் குழிகள் தோண்டப்பட்டப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி இந்த பகுதியில் தொடர் விபத்துகள் நேரிடுகின்றன. தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருக்கின்றோம். எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் விபத்துகள் நேரிடாமல் இருக்க சாலையில் தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும்,"என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான விபத்து தொடர்பான காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளன. நீண்டநேரமாக காத்திருந்து சாலையை கடக்க முயன்ற பெண் ஒருவர் இன்னொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளான காட்சி பதைபதைக்க வைப்பதாக உள்ளது.