புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த மோதலில் இரண்டு பாஜக எம்பிக்கள் காயம் அடைந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
வன்முறையற்ற பாதை: தேசிய ஜனநாயக கூட்டணி-இந்தியா கூட்டணி இடையே நேரிட்ட அமளிக்கு இடையே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெய்லாட், "உண்மையின் பாதையை கடைபிடிக்கும், மனித நேயத்துடன் சேவை செய்யும் எண்ணம், பழக்கம், சிந்தனைகளை கொண்ட ராகுல் காந்தியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த நாட்டு மக்களுக்காக வன்முறையற்ற வழியில் சேவையாற்றுதல், அன்பு மற்றும் சகோதரத்துவத்தை தமது கடமையின் ஒரு பகுதியாக கொண்டிருந்ததால் நாடு முழுவதும் 4000 கி.மீ பாதையாத்திரையாக ராகுல் சென்றார். ராகுல் காந்தியின் குடும்பம் வன்முறையற்ற பாதையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவரின் குடும்பம் மன்னித்தது.
ராகுல் காந்திக்கு எதிராக காலையில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதே நாள் மாலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஒரு ஆழமான சதித்திட்டத்தின்படி இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது என்பது தெளிவாகிறது. பாஜக எம்பிக்கள் எங்களுடைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதர எம்பிக்களை தள்ளியது, மரியாதை குறைவாக நடத்தியது குறித்து ஊடகத்தில் குறிப்பிடப்படவில்லை.
இதையும் படிங்க: "நல்லா பாக்குறேன்" -நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கிண்டல் பதில்!
நேற்று இந்த நிகழ்வு நடந்தது. ஏன் இதுவரை அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் பாஜகவுக்கு ஆதரவான வகையில் மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னரே அவர்கள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இது ஒரு பெரிய சதித்திட்டம். ராகுல் காந்திக்கு எதிராக ஊடகம், அதிகாரிகள், அரசு ஆகியவை செய்திகளை பரப்புகின்றன. ஆனால், இந்த நாட்டு மக்களுக்கு ராகுலை நன்கு தெரியும். இந்த பரப்புரைகள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது,"என்றார்.
மன்னிக்கத்தக்கது அல்ல: இதனிடையே நேற்றைய சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக எம்பி அனுராக் தாக்கூர், அனைத்து விதிகளையும் ராகுல் மீறியிருக்கிறார். தவறாக நடந்து கொண்டதற்கு இதுவரையிலும் அவர் மனிப்புக் கேட்கவில்லை. இதே போன்ற ஆணவத்தை ராகுல் காந்தியிடம் நேற்று காணமுடிந்தது. சக எம்பிக்களிடம் அவர் நடந்து கொண்டதை மிகவும் எதிர்பார்க்கவில்லை. அவர் செய்தது மன்னிக்கத்தக்கது அல்ல.
அவர் (ராகுல் காந்தி) காயமடைந்தவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, எங்கள் எம்பிகளிடம் நலம் விசாரிப்பதை மறந்து விட்டார், மன்னிப்பு கேட்க மறந்து விட்டார். அவரது முகத்தில் திமிர் தெரிந்தது. தள்ளு முள்ளு தொடர்ந்து நடக்கிறது என்று ராகுல் காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். யாரையும் எதையும் செய்ய முடியும் என்று அவர் நினைக்கிறார் என்பது தெளிவாகிறது," என்று கூறியுள்ளார்.