சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு நேற்று உண்டியல் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் தாலி, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கேற்ப காணிக்கைகள் செலுத்தியிருந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி. EO குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் 52 லட்சம் ரூபாயு் ரொக்கமும், 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இதில் வியக்கத்தக்க வகையில் பக்தர் ஒருவர் தவறவிட்ட ஒரு செல்ஃபோனும் உண்டியலில் கிடைக்கப்பெற்றுள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமான செல்ஃபோன் என்பதும், அவர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ( சிஎம்டிஏ) பணிபுரிபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்து செல்ஃபோனை பெற ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கோவில் நிர்வாகத்தினர், உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்ஃபோன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் அதில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால், செல்ஃபோனை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்துடன் வந்த தினேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏற்கெனவே இவர் தனது செல்ஃபோனை மீட்டுக் கொடுக்கும்படி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், செல்ஃபோனை திரும்பப பெறுவது தொடர்பாக நிர்வாகரீதியான முறைப்படி அங்கு மனு அளிக்கலாம் என்று திருப்போரூர் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததன் பெயரில் தினேஷ் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
இது குறித்து விளக்கம் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இதுபற்றி செய்திகள் மூலம் தாம் அறிந்து கொண்டதாகக் கூறினார். செல்போன் உண்டியலில் விழுந்த சம்பவம் பற்றி தீர விசாரித்து முடிவு மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். "எப்போதுமே உண்டியலில் விழுந்த பொருட்கள் சாமி கணக்கில் தான் வரவு வைக்கப்படும், ஆனால் இதில் ஏதாவது விதிவிலக்கு இருக்கிறதா என ஆராயப்படும்" என உறுதியளித்த சேகர்பாபு, சட்டப்படி ஆராய்ந்து ஏதேனும் வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக பக்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார்.