தஞ்சாவூர்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி. இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, மானோஜிபட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, காளை மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை தயார்ப்படுத்தியுள்ளனர். மேலும், வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் இருக்க காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காளைகளுக்கு பருத்திக் கொட்டை, தவிடு, கடலை புண்ணாக்கு, உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, நாட்டுப்புல், வைக்கோல் உள்ளிட்டவை வழங்கப்படுவதாகத் தெரிவித்த மாட்டு உரிமையாளர், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் தங்கள் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் எதிர்கொள்ள நீச்சல் பயிற்சி, அதிவேக நடைபயிற்சி, மண் குத்துதல், பாய்ச்சல் ஆகிய அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பனமடங்கி எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.. திடீரென கிணற்றில் விழுந்த காளை!
இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த காளை வளர்த்து வரும் பாலகுரு கூறுகையில், "ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறும் போட்டிகளில் தங்களது காளைகள் பங்கேற்று வெற்றி பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்த அவர், 3 மாதத்திற்கு முன்பிருந்தே பயிற்சி, உணவு முறைகள் உள்ளிட்டவற்றை ஆரம்பித்துவிடுவோம். புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு எங்களது மாடு வெற்றி பெற்றது" எனத் தெரிவித்தார்.