ஹைதராபாத்: ராமோஜி குழுமத்தின் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 60 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அதன் 121 ஆவது கிளை ஸ்கை சிட்டி என்று அழைக்கப்படு்ம் கச்சிபெளலியில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
புதிய கிளையை ராமோஜி குழும நிறுவன தலைவரும், இயக்குநருமான சிஎச் கிரண் திறந்து வைத்தார். அத்துடன் புதிய கிளையின் முதல் வாடிக்கையாளர்களான ஜம்பனி -கல்பனா தம்பதியிடம் அறிமுக சீட்டுக்கான ரசீதையும் சம்பிரதாயரீதியாக அவர் ஒப்படைத்தார்.
வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான அர்ப்பணிப்பு:
துவக்க விழாவில் சிஎச்.கிரண் பேசும்போது, "வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்குவதில், மார்கதர்சி எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில், பரந்த அளவிலான சீட்டு திட்டங்களை வழங்கி வருவதன் மூலம் 60 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையை நாங்கள் நிலைநிறுத்தி வருகிறோம்." என்றார்.
மேலும் அவர் கூறும்போது, " மார்கதர்சியின் நிர்வாக இயக்குநரான சைலஜா கிரணுக்கு, நிறுவனத்தின் வளர்ச்சியே குறிக்கோள். நிறுவனத்தின் பணியை முன்னேற்றும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை உறுதி செய்வதே வளர்ச்சி மற்றும் முன்னோக்கி செல்லும் வழி என்று அவர் நம்புகிறார்" எனவும் கிரண் கூறினார்.
மார்க்தர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் பேசும்போது, "சிறிய அளவிலான சீட்டு திட்டங்களில் தொடங்கி தற்போது இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் அளவிலான திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் அளவுக்கு எங்கள் நிறுவனம் அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், அவர்களுக்கான சீட்டு பணம் இரண்டு முதல் மூன்று வாரங்களில் செலுத்தப்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். இதன் காரணமாக, இந்தியாவின் நம்பர் ஒன் சிட் ஃபண்ட் நிறுவனமாக மார்கதர்சி திகழ்கிறது" என்று சைலஜா கிரண் பெருமிதம் தெரிவித்தார்.
துவக்க விழாவில் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி, ஈடிவி பாரத் இயக்குநர் பிருஹதி, சபாலா மில்லட்ஸ் இயக்குநர் சஹாரி, ராமோஜி ராவின் பேரன் சுஜய், ஈடிவியின் தலைமை செயல் அதிகாரி பாபிநீடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஈநாடு தெலங்கானா ஆசிரியர் டி..என்.பிரசாத். ஈநாடு ஆந்திராவின் ஆசிரியர் எம்.நாகேஸ்வர ராவ், மார்கதர்சி தலைமை செயல் அதிகாரி சத்தியநாராயணா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்