தஞ்சாவூர்: மத்திய அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். வேளாண்மை பிரிவுக்கான பட்ஜெட் அறிவிப்பின் போது, விவசாயிகள் அட்டைகள் மூலம் பெறுவதற்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். நாடு முழுவதும் 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாசன மேம்பாடு மற்றும் விளை பொருட்களுக்கான சேமிப்பு கிடங்கு வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்நிலையில், பல நல்ல திட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக டெல்டா விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஜீவக்குமார் கூறுகையில், '' மத்திய பட்ஜெட்டில் நதிநீர் இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கங்கை, யமுனை ஆறுகள் மாசடைகிறது. காவிரி நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்று தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் படி, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லை. இயற்கை விவசாயம், தோட்டக்கலைத்துறை ஆகியவை தொடர்பான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிதி தொடர்ந்து வராமல் உள்ளது'' என்று கூறினார்.
இதையும் படிங்க: “மகாத்மா காந்தி பற்றி ஆளுநர் பேசுவது வேடிக்கையாக உள்ளது”- செல்வப்பெருந்தகை காட்டம்!
மேலும், கரும்பு விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், ''பட்ஜெட்டில் பயிர் காப்பீடு அறிவிப்பு இல்லை. விளைபொருளுக்கு விலை உயர்வு இல்லை. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை. பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
கிசான் க்ரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு கடன் அறிவித்துள்ளனர். அது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தான் பயன் தரும். விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது மாறி உள்ளது. மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது'' என குற்றஞ்சாட்டி பேசினார்.