வேலூர்: கொல்லைமேடு துருவம் பகுதியில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சிறுத்தையை பிடிக்க காப்பு காட்டில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
![உயிரிழந்த பெண் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-12-2024/23163089_1.jpg)
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கொல்லைமேடு துருவம் பகுதியில் உள்ள காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதியில், புதன்கிழமை (டிசம்பர் 18) பொழுது சாயும் மாலை வேளையில் அஞ்சலி (22) என்ற இளம்பெண், வீட்டில் இருந்து வெளியே சென்ற போது சிறுத்தை தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை:
இப்பகுதிகளில் முறையான சாலை வசதி, மின்விளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் சிறுத்தையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண் உயிரிழப்பு; தாக்கிக் கொன்ற சிறுத்தையை ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை!
இதனையடுத்து, ட்ரோன் உதவியுடன் இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
![வனப்பகுதியில் கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-12-2024/23163089_4.jpg)
இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று (டிசம்பர் 20) வெள்ளிக்கிழமை, மாவட்ட துணை வன பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையிலான வனத்துறையினர், வனப்பகுதியில் 3 டிராப் கேமராக்களை (Camera trap) பொருத்தி சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க முயற்சி:
தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க காப்பு காட்டில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, பேரணாம்பட்டு வனத்துறை அலுவலகத்தில் இருந்து கூண்டை கொண்டுவந்து காப்புக்காட்டில் வனத்துறையினர் வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை டிராப் கேமரா மூலம் அறிந்து, தொடர்ந்து கூண்டு வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-12-2024/23163089_2.jpg)
இது குறித்து பேசிய மாவட்ட உதவி வன அலுவலர் மணிவண்ணன், "சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, இரண்டு நாட்களாக வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "உண்டியலில் போட்ட அனைத்தும் முருகனுக்கே சொந்தம்" - மொபைலைப் பறிகொடுத்தவர் ஷாக்
தற்போது, அப்பகுதி மக்களிடமே கேட்டு சந்தேகத்திற்கு உள்ளான இடங்களில் 3 டிராப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-12-2024/23163089_3.jpg)
வனத்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பதால், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக வனத்துறையினரின் தொலைப்பேசி எண்கள் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் வீட்டின் வெளியே விளக்குகளை எரியவிட்டபடி இருக்க வேண்டும், கால்நடைகளை பட்டியில் கட்டி வைக்க வேண்டும்," என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளம்பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அவருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, வனத்துறையினரின் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.