புனே: இந்தியா ஒருமைப்பாட்டுடன் வாழ முடியும் என்பதை உலகுக்கு காட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். "இந்தியா விஸ்வகுரு" என்ற தலைப்பில் புனேவில் நடைபெற்ற உபன்யாச தொடரில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்
மேலும் அவர் பேசும்போது, இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டிய அவர், ராமகிருஷ்ண மடத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது இதன் வெளிப்பாடு தான் எனக் கூறினார். "இதனை நம்மால் மட்டுமே செய்ய முடியும் ஏனெனில் நாம் இந்துக்கள்" என கூறிய அவர், நீண்டகாலமாக இந்த நாட்டில் ஒருமைப்பாட்டுடன் வசித்து வருவதாகவும் கூறினார். உலகிற்கு இந்த ஒருமைப்பாட்டுணர்வை வழங்க வேண்டுமென்றால் இதற்கான ஒரு மாதிரியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.
ராமர் கோயிலை கட்டிய பிறகு இதே போன்ற பிரச்சனைகளை வேறு இடங்களில் எழுப்புவதன் மூலம் சிலர் தாங்கள் இந்துக்களின் தலைவராகிவிட முடியும் என நம்புவதாகக் சாடிய மோகன் பகவத், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என கூறினார்.
அனைத்து இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்ததால் மட்டுமே ராமர் கோயில் கட்டப்பட்டது எனக் கூறிய மோகன் பகவத். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகளை எழுப்பி வருவதாகவும், இதனை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். "நாம் ஒருமைப்பாட்டுடன் வாழ முடியும் என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.
சமீபகாலமாக நாட்டின் பல்வேறு மசூதிகளின் கீழே கோயில்கள் இருப்பதாகக் கூறி, நீதிமன்றங்களின் படியேறி வரும் நிலையில், இவை எதையும் நேரடியாக குறிப்பிடாமல் மோகன் பகவத் இவ்வாறு பேசியுள்ளார்.
வெளியிலிருந்து வந்த சில குழுக்கள், சில அடிப்படைவாத சக்திகள் தங்களின் பழைய ஆட்சியை கொண்டு வர நினைப்பதாகக் கூறிய மோகன் பகவத், "ஆனால் தற்போது நாடு அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த கட்டமைப்பில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆதிக்கசக்திகளுக்கான நாட்கள் போய்விட்டன" என கூறினார்.
முகலாய ஆட்சியாளர் அவுரங்கசிப் அடிப்படைவாத எண்ணங்களுக்காக அறியப்படுபவர் என கூறிய மோகன் பகவத், ஆனாலும் அவரது வழி வந்த பகதூர் ஷா ஜாஃபர் 1857 ம் ஆண்டு பசுவதையை தடை செய்ததாகக் கூறினார். "அயோத்தியில் ராமர் கோயிலை இந்துக்களுக்குத் தான் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதனை உணர்ந்து கொண்ட பிரிட்டீஷார் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கினர், இந்த பிரிவினை முயற்சியின் பலனாகவே பாகிஸ்தான் உருவானது" எனவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் தங்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்தினால், "ஆதிக்க மொழி" ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று பகவத் கேள்வி எழுப்பினார். “யார் சிறுபான்மை, யார் பெரும்பான்மை? இங்கு அனைவரும் சமம். இந்த தேசத்தின் பாரம்பரியம் என்னவென்றால், அனைவரும் அவரவர் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம். ஒரே தேவை இணக்கமாக வாழ்வதும், விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதும்தான்,” என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.