மும்பை: மும்பை தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்காக மகாராஷ்டிரா அரசு சார்பில் அதானி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட டெண்டரை பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மும்பையில் 259 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கான ரூ.5,069 கோடி டெண்டரை 2022ஆம் ஆண்டு அதானி குழுமத்துக்கு மகாராஷ்டிரா மாநில அரசு வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தாராவி குடிசைப்பகுதி மறுசீரமப்புக்காக கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டரை அதிக விலைப்புள்ளியாக ரூ.7200 கோடி குறிப்பிட்டு எடுத்தோம். ஆனால், எங்களுக்கு தரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு 2022ஆம் ஆண்டு அதானி குழுமத்துக்கு ரூ.5,069 கோடி என குறைவான தொகைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டரை ரத்து செய்து, எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,"டெண்டர் நடைமுறைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டது. அதிக தொகைக்கு டெண்டர் கோரிய அதானி குழுமத்துக்கு சாதகமாக செயல்படவில்லை. 2018ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.கொரோனா சூழல்,ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற நிதி,பொருளாதார ரீதியான அம்சங்கள் காரணமாக மீண்டும் 2022ஆம் ஆண்டு புதிதாக டெண்டர் விடப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக எம்பிக்களை தாக்கியதாக ராகுலிடம் போலீஸ் விசாரிக்குமா?
முதலில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெண்டர் திறக்கப்பட்டது. மனுதாரர் நிறுவனம் அதிக தொகைக்கு டெண்டர் கேட்டிருந்தது. அதே மாதம் கூடுதலாக 45 ஏக்கர் நிலம் இந்திய ரயில்வேயிடம் இருந்து இந்த திட்டத்துக்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மனுதாரரின் நிறுவனத்துடன் மாநில அரசின் சார்பில் எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இந்த விஷயத்தில் டெண்டருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சட்டரீதியாக மனுதாரருக்கு உரிமை இல்லை. டெண்டர் தவணை தேதிக்குப் பின்னர் பொருளில் மாற்றம் இருந்ததால் முதல் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக டெண்டர் விடப்பட்டது. அதில் குறிப்பிட்ட விதிமுறைகள் நிபந்தனைகளுக்கு ஏற்ப புதிய டெண்டரை மனுதாரர் தாக்கல் செய்திருக்கலாம்,"என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,"எதிர்ப்பு தெரிவித்து நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்பதற்கான போதுமான வலுவான ஆதாரங்கள் இல்லை. எனவே, மகாராஷ்டிரா அரசு மனுதாரரின் டெண்டரை ரத்து செய்ததற்கும், புதிய டெண்டர் விடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,"என கூறினர்.