கேரளா:கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த தற்போது 18 வயதான விளையாட்டு வீராங்கனை சிறுமிக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி நேற்று (ஜன.10) வெள்ளிக்கிழமை புகார் அளித்த பின்னே இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சிறுமி பயின்று வந்த கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்கள், சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) நடத்திய கவுன்சிலிங்கில், அச்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழு பெற்ற அறிக்கையை, பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
40 பேர் மீது வழக்குப் பதிவு:
அந்த புகாரைப் பெற்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், 40 நபர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், எலவும்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த அந்த சிறுமியின் வாக்குமூலத்தின் படி, விளையாட்டுப் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடன் பயிலும் நண்பர்கள் உள்ளிட்டோர் இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.