டெல்லி:18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 3வது கட்ட தேர்தலில் 5.68 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 13ஆம் தேதி 4வது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மே 20ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற 5வது கட்ட மக்களவை தேர்தலில் 62.2 சதவீத வாக்குகள் பதிவாகின.
மே 25ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6வது கட்ட மக்களவை தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில். பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (ஜூன்.1) 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை மேற்கொண்ட பிரபல செய்தி நிறுவனங்கள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி, நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 315 முதல் 371 இடங்களையும், இந்தியா கூட்டணி 60 முதல் 125 இடங்களையும் பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.