பீகார்:நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. பீகாரில் மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இம்மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பீகாரில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகளை, லூலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று நீண்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவாகி இருப்பதாகத் தெரிகிறது.
பீகார் மாநிலத்தை பொறுத்தவரையில், காங்கிரஸ் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய கேட்கப்பட்டு இருந்த நிலையில், 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்க ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டமிட்டு இருந்தது. இதனால் கூட்டணி முறிவு பெறும் நிலையில் இருந்ததாகவும், அதன் பின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் தலையீட்டுப் பேச்சு வார்த்தை நடத்திய பின், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்ணியா, அவுரங்காபாத் ஆகிய இரு தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான தொகுதிகளாகும். ஏனெனில், இந்த இரண்டு தொகுதிகளுமே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நிறைந்த தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. அங்கு ராகுல் காந்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே, தங்களுக்கு இந்த தொகுதியினை ஒதுக்குமாறு, காங்கிரஸ் தொடர்ந்து நட்பு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
பூர்ணியா தொகுதியைக் கருத்தில் கொண்டுதான், ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொண்டு, அவரை அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், பீகாரில் முக்கிய அரசியல் தலைவராக கருதப்படும் பப்பு யாதவும், பூர்ணியாவில் போட்டியிட பல ஆண்டுகளாக தன்னை தயார்படுத்தி வந்தார்.