கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டவழக்கில் நீதி கேட்டும், பணியிடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளி்ல் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சிபிஐ விசாரணையில் அதிருப்தி.. மீண்டும் போராட்டத்தில் குதித்த கொல்கத்தா இளம் மருத்துவர்கள்! - Kolkata Rape Murder - KOLKATA RAPE MURDER
ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு கொல்கத்தா அரசு இளநிலை மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளதால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Published : Oct 3, 2024, 4:15 PM IST
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து 42 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட இளநிலை மருத்துவர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி பகுதி அளவுக்கு பணிகளைத் தொடங்கினர். இந்த நிலையில் மீண்டும் தங்களது முழு அளவிலான வேலை நிறுத்தத்தை கடந்த செவ்வாய்கிழமை முதல் தொடங்கி உள்ளனர்.
மேற்கு வங்க அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று இளநிலை மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இளநிலை மருத்துவர்கள், " மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. இது அதிருப்தி அளிப்பதாக உள்ளது. மேலும் மாநில சுகாதாரச் செயலாளரை பணியில் இருந்து நீக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு போலீசாரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். காலியாக உள்ள மருத்துவர் , செவிலியர், மருத்துவ பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவமனை படுக்கை வசதிகள் நிலவரம் குறித்து அறியும் இணைய வசதியை ஏற்படுத்த வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.