உத்தர கன்னடா (கர்நாடகா):கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா அடுத்த ஷிரூர் பகுதியில் கடந்த வாரம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோகர்ணாவுக்கு அடுத்துள்ள கங்கேகோலா பகுதியைச் சேர்ந்த லோகேஷ் எனபவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போனதாகக் கூறி, அவரது தாயார் மாதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரது தாய் அளித்த புகாரில், அவரது மகன் கோவாவில் படகு சவாரி செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பின்னர் விடுப்பு எடுத்துக் கொண்டு நிலச்சரிவு நிகழ்ந்த தினத்தன்று கிளம்பியதாகவும், இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, ஷிரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 7 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.