முசாபர்பூர்:திடீரென நேரிட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் தண்ணீரால் சூழப்பட்ட வயல்வெளியில் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பீகாரில் அவசரமாக தரையிறங்கியது ஏன்? - IAF Helicopter Emergency Landing - IAF HELICOPTER EMERGENCY LANDING
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில் அதில் இருந்தவர்களை அருகில் உள்ள கிராமத்தினர் பத்திரமாக மீட்டனர்.
Published : Oct 2, 2024, 6:21 PM IST
இது குறித்து பேசிய மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார், "பீகாரின் தர்பங்கா பகுதியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப்பொருட்கள் போடப்பட்டன. இந்த பணியை முடித்துத் திரும்பிய ஹெலிகாப்டர் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்ணீரால் சூழப்பட்டிருந்த அவுரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் தரையிறங்கியதைக் கண்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். அந்த நேரத்தில் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர்," என்று கூறினார். மேலும் இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் குமார் சென், " ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் காயம் நேரிடவில்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர்," என்று கூறினார்.