ஹைதராபாத்:மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் ஆயத்த மற்றும் முதன்மைப் புள்ளியாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக பிரதமர் மோடி, இன்று கேரளாவில் வைத்து அறிவித்தார்.
ககன்யான் திட்டம் என்றால் என்ன?மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியை நோக்கமாகக் கொண்டுள்ள ககன்யான் திட்டத்தின்படி, விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே தலையாய நோக்கமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மூலம் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதை இஸ்ரோ தளம் உறுதி செய்கிறது.
இவ்வாறு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் 3 மனிதர்களை 400 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், அடுத்த மூன்று தினங்களுக்குள் மூன்று பேரையும் பாதுகாப்பாக தரையிறக்க பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் விண்வெளியில் வீரர்களுக்கு பூமி போன்று வாழ்வதற்குத் தேவையான நிலைகளை உருவாக்குதல், விண்வெளிக் குழுவினர் அவசரகால நேரத்தில் தப்பிப்பதற்குத் தேவையான தளம் ஆகியவற்றை கொடுப்பதில் ககன்யான் திட்டக் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ககன்யான் ஏவுகணை எது?இஸ்ரோவின் நம்பகமான மீண்டும் மீண்டும் பல்வேறு சோதனைகளில் நிரூபிக்கப்பட்ட கனரக லிப்ட் ஏவுகணை, ககன்யான் விண்கல ஏவுகனையாக எல்விஎம்3 (LVM3) ராக்கெட் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் ஆகிய நிலைகளுடன் வடிவமைக்கப்பட்டு, மனித தேவைகளை பூர்த்தி செய்யும் வகையைக் கொண்டுள்ளது. மேலும், HLVM3 ஆனது, குழு எஸ்கேப் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இது ஏவுதளத்தில் அல்லது ஏறும் கட்டத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், வீரர்களுடன் க்ரூ மாட்யூல் பாதுகாப்பான தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்கிறது.
ககன்யானுக்கான குழு பயிற்சி:பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சியில், வகுப்பறை பயிற்சி, உடற்தகுதி பயிற்சி, விமான உடை பயிற்சி, ககன்யான் விண்கல அமைப்புகள், பாராபோலிக் வாகனம் மூலம் மைக்ரோ - கிராவிட்டி செயல்முறைகள், ஏரோ-மெடிக்கல் பயிற்சி, மீண்டு வருதல் மற்றும் வாழ்வது தொடர்பான பயிற்சி, காலங்கருதி பறப்பதற்கான பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.