தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ரீமால் புயல்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு! - CYCLONE REMAL UPDATE - CYCLONE REMAL UPDATE

Cyclone Remal: மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ரீமால் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் (மே 27 மற்றும் 28) வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 10:43 AM IST

கொல்கத்தா: தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் கடந்த 22ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 23ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

மேலும், வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24ஆம் தேதி காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்கக் கடலில் மே 25 காலை ரீமால் புயலாக மாறியது. மேலும், இந்த ரீமால் புயல் வங்கதேசத்திற்கு அருகே மே 26 நள்ளிரவு தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மே 26ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்தது, வங்கதேசத்தின் கேபுபாராவிற்கு தென்-தென்மேற்கில் சுமார் 290 கி.மீ தொலைவிலும், அந்நாட்டின் மோங்லாவில் இருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு தென்-தென்கிழக்கே சுமார் 270 கி.மீ தொலைவிலும், திகாவிலிருந்து தென்-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், கேனிங்கிற்கு தென்-தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டது.

தொடர்ந்து, இப்புயல் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரையான சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே, தென்மேற்கே மோங்லா வங்கதேசத்துக்கு அருகே நேற்று நள்ளிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், ரீமால் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதுமட்டுமின்றி, ரீமால் புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நேற்று மாலை முதலே பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசத்துவங்கியது. மேலும், நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை ரீமால் புயல் கரையைக் கடந்ததாகக் வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்படுகிறது.

அதாவது, வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 - 120 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 135 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசியதாகவும், இப்புயல் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, ரீமால் புயலின் தாக்கத்தால், மேற்குவங்கத்தில் உள்ள சாகர் தீவுப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சாலைகளில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, சேதமடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக வங்கதேச கடற்கரை பகுதிகள் மற்றும் திரிபுரா பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 1.10 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மற்றும் தேசிய மீட்புப்படை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தி, முன்னறிவிப்பை வழங்கினார்.

இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details