டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்று மீண்டும் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுவதற்கான சர்வாதிகாரம் தழைத் தோங்கியுள்ளது என்றார்.
தான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக் கொண்டு வருவதாகவும் ஆனால் தனி ஆளாக எதுவும் செய்ய இயலாது என்றார். ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என 140 கோடி மக்களிடமும் தான் மண்டியிட்டு கேட்டுக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
உச்ச நீதிமன்றம் தனக்கு 21 நாட்கள் மட்டுமே வழங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக வழங்குவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் எதிர்காலம் ஆம் ஆத்மி கட்சி தான் எதிர்காலம் என்பதை பிரதமர் அறிந்து கொண்டதால் பயத்தில் பாஜக தம்மை நசுக்கப் பார்ப்பதாகவும் கூறினார்.
ஆம் ஆத்மி சிறிய கட்சி, இரண்டு மாநிலங்களில் மட்டும் முழுவீச்சில் உள்ளது, ஆனால் பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியின் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பியதகாவும், ஒரே நேரத்தில் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினால் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என பிரதமர் மோடி நம்புவதாகவும் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் இந்தியாவின் வருங்காலம் என எண்ணி பிரதமர் மோடி அஞ்சுவதால் கட்சியை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து நேரடியாக மக்களை சந்திக்க வந்தது நல்ல உணர்வை ஏற்படுத்துவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.