டெல்லி:நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொறுப்புகள், சொத்து மதிப்பு மற்றும் குற்றப் பின்னணி உள்ளிட்டவற்றை குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள 'நோ யுவர் கேண்டிடேட்' (Know Your Candidate - KYC) என்ற புதிய செயலி ஒன்றை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "வாக்காளர்கள், தங்கள் தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்றப் பின்னணி இருப்பின் அது குறித்து தெரிந்து கொள்வது வாக்காளர்களின் உரிமை. அதற்காக தேர்தல் ஆணையம் தரப்பில் கேஒய்சி (KYC) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் குற்றப் பின்னணி உட்பட அனைத்து விவரங்களையும், வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்று ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளம் கொண்ட செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் வழியாக 3 முறை வெளியிட வேண்டும். குறிப்பாக தங்கள் மீதுள்ள வழக்குகள், அதற்கு வழங்கப்பட்ட தண்டனைகள் ஆகியவற்றை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.