ராஞ்சி:ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன், முதலமைச்சராக பதவி வகித்து வந்த போது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
6 மாதம் முதலமைச்சர்:கடந்த 2 பிப்ரவரி, 2024 முதல் 3 ஜூலை, 2024 வரை ஜார்க்கண்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், ஜூலை 3ஆம் தேதி வரை 6 மாதம் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்தாக கூறப்படும் சம்பாய் சோரன், தனது ஆதரவாளர்களுடன் 3 நாள்கள் டெல்லியில் முகாமிட்டார். இதனால் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதமாக, தனது எக்ஸ் பக்கத்தின் பயோவையும் அவர் மாற்றினார்.
முன்னதாக, எம்பிசி நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்றும், ஜேஎம்எம் கட்சியின் துணைத் தலைவர் என்றும் வைத்திருந்தார். ஆனால், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் என்று மட்டுமே வைத்துள்ளார். இதனால் அவர் பாஜகவில் இணைவது உறுதி என்று கூறிவந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்றதாகக் கூறினார். இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியால் தனது சுயமரியாதை பாதிக்கப்பட்டதாகவும், புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்:இந்நிலையில், இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சம்பாய் சோரன் கூறியதாவது, "நான் ஏற்கனவே கூறியது போல் தனக்கு 3 ஆப்ஷன்கள் இருந்தது. ஒன்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, மற்றொன்று அமைப்பை உருவாக்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது.
நான் ஓய்வு பெற மாட்டேன். மாறாக புதிதாக கட்சி ஒன்றைத் தொடங்கி, அதை வலுப்படுத்த உள்ளேன். அதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அவர்களுடன் சேர்ந்து முன்னேறவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் தான் சம்பாய் சோரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதாகக் கூறியுள்ளது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திரிணாமுல் மாஜி எம்பி மிமி சக்ரவர்த்திக்கு பாலியல் மிரட்டல்.. மேற்கு வங்கத்தில் புதிய சர்ச்சை..!