ஆரா :சனாதன தர்மம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பீகார் மாநிலம் ஆரா முதன்மை நீதிபதி சம்மன் வழங்க உத்தரவிட்டு உள்ளார். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துகள் மனதை புன்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து இருந்ததாக கூறி தரீந்தர் பாண்டே என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு ஆரா முதன்மை நீதிபதி மனோரஞ்சன் குமார் ஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பக் கோரி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதேபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.