திருப்பதி:உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்புத் தரிசனத்திற்கு முன்பதிவு குறித்த அறிவிப்பைத் திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த கோயிலுக்கு நாட்டின் அனைத்து மாநிலங்கள் மட்டுமில்லாது வெளிநாட்டில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகப் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொள்வது வாடிக்கையாகும். அதன்படி, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யத் தொடங்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பதி தேவஸ்தான் வெளியிட்டுள்ள தகவலில், 'மே 18ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஸ்ரீவாரி ஆகஸ்ட் மாதத்தின் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இச்சேவைக்கான டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் முறையில் பெற மே 20 ஆம் தேதி காலை 10.00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆன்லைனில் டிக்கெட்டுகளைப் பெற மே 20 முதல் 22 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்குள் பணம் செலுத்தினால் மின்னணு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்க உள்ள திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் எஸ்டி சேவா உள்ளிட்ட வருடாந்திர பவித்ரோத்ஸவம் சேவைகள் உள்ளிட்டவற்றுக்கும் இம்மாதம் மே 21ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி தரிசனத்துக்கான டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.